1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (13:28 IST)

பெண்களை தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டும் பெர்சிவ்ர் வுமன் பார் கிரீன் எர்த்

பெண்களை தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டும் பெர்சிவ்ர் வுமன் பார் கிரீன் எர்த்

1990 ஆம் ஆண்டில் மதுரையிலுள்ள நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த எனக்கு ஆசிரியையாக வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பித்து விட்டுக் காத்திருந்தேன்.


 


இந்த நிலையில் மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் இயங்கி வந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஆசிரியப் பயிற்சியில் சேரும் வரை கிடைத்த பணியைச் செய்வோம் என்கிற எண்ணத்தில் அந்தப்பணியில் சேர்ந்தேன். 
 
காய்கறி வணிகம் செய்யும் பெண்களுக்குச் சிறிய அளவிலான கடன் கொடுத்து அவர்களை வணிகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைய வழிகாட்டும் பணி அது. அந்தப்பணி என் ஆசிரியப்பணியின் மேலான ஆர்வத்தை மாற்றி எனக்குப் புதிய வழியைக் காட்டியது. இதற்கிடையில்  வீடு கட்டுவதற்குக் கடன் வழங்கும் பொது நிறுவனமொன்றில் க்ளெர்க் பதவிக்கு வேலையில் சேர்ந்த நான் அவர்களுடைய இன்னொரு நிறுவனமான ரிசார்ட்டில் தமிழக அளவில் முதல் பெண் விற்பனைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.


 
 
இதற்கிடையில் திருமணம், மேற்படிப்பு இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளர், மதுரையில் பல கிளைகளைக் கொண்ட உணவகம் ஒன்றில் கேட்டரிங்  மேலாளர் என்று பல்வேறு பணிகளுக்குச் சென்றேன். இந்தப்பணிகளில் என் குடும்பத்தின் பொருளாதாரம் மேம்பட்டது குழந்தை பிறந்து விடுமுறையில் இருந்த நேரம் தையல், பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்தல் போன்ற பெண்களுக்கான பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை மனமகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்டேன்...
 
2004 ஆம் ஆண்டில் மதுரை பல்நோக்கு சமூகப்பணி மையத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கைக்கு நல்வழிகாட்ட, அவர்களுக்குப் பல்வேறு சுயதொழில் பயிற்சி அளிக்கும் பணிக்கு அழைப்பு வந்தது. 
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க..........

 


சமூகத்தில் ஒதுக்கப்பட்டுத் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அந்தப் பணிக்குத் திரும்பினேன். அதன் பின்பு, மகளிர் திட்டத்தில் இணைந்து 4 கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களை வழி நடத்தும் பணிக்குச் சென்றேன். இப்பணியில் இருக்கும் பொழுது, சுய உதவிக்குழுவினர்களில் சிலரை உள்ளாட்சித் தேர்தலில் பங்குபெறச் செய்து நான்கு பெண்களை ஊராட்சிமன்ற உறுப்பினர்களாகவும், ஒரு பெண்ணை ஊராட்சிமன்றத் துணைத்தலைவியாகவும் தேர்ந்தெடுக்க உதவினேன்.
 
இதனைத் தொடர்ந்து, மதுரை சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் உதவித் திட்ட அலுவலராக பணியில் சேர்ந்தேன். இந்நிறுவனத்தின் மூலம், மதுரையில் காகிதக்கூழ் பொம்மை உற்பத்தி, விளாச்சேரி மண் சிலைகள் தயாரிப்பு, தங்கநகை தயாரிப்பு, காரைக்குடியில் மரச்சிற்பங்கள் உற்பத்தி, ஆத்தங்குடி ஓடுகள் தயாரிப்பு, அரியக்குடி குத்துவிளக்கு உற்பத்தி, தஞ்சாவூரில் வீணை உற்பத்தி, தஞ்சாவூர்தட்டு தயாரிப்பு, தலையாட்டி பொம்மை உற்பத்தி மற்றும் கும்பகோணம் சுவாமிமலை சிலைகள், பித்தளைக் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, பட்டு நெசவு நெய்தல் போன்ற பல்வேறு கைவினைத்தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் மேம்பாட்டுக்கான தொழில்வழியிலான குழுக்கள் அமைக்கும் பணி, வழிநடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பல்வேறு கைவினைக்கலைஞர்களைச் சந்தித்ததுடன், அந்தத் தொழில் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதுடன், அந்தப்பணிகளில் பெண்களின் பங்களிப்புகளை அதிகரிப்பது குறித்தும் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்தேன்.


 
 
இந்நிலையில் இந்தியத் துணிகள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் இலவச கைவினைப்பொருள் சந்தை ஒன்றை நடத்த நான் பணியாற்றிய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்சந்தைக்கான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நானும் பணியாற்றினேன். இதன் வழியாக பல்வேறு மாநிலக் கைவினைப்பொருட்களின் சந்தைப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளையும் நான் கற்றுக் கொண்டேன்.
 
நான் பணியாற்றிய நிறுவனத்தில் என்னுடைய செயல்பாட்டிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. என் மேல் நம்பிக்கை கொண்டு பல்வேறு பணிகள் எனக்குக் கூடுதலாக வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை நான் மிகச்சிறப்பாக செய்து கொடுத்ததால் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.. இதனால் அங்கு தொழிற் பயிற்சி எடுத்துக் கொண்ட பெண்கள் நான் அவர்களுக்கு வழிகாட்டுவேன் என நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்...

நான் பணி புரிந்த இடங்களில் அதற்கான சூழ்நிலை இல்லை...எனவே பெண்களுக்கு சந்தை வாய்ப்புள்ள தொழில்களை சிறந்த முறையில் கற்றுக் கொடுத்து அதற்கான சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால் என்ன என்கின்ற எண்ணங்களில் உருவானதே பெர்சிவ்ர் வுமன் பார் கிரீன் எர்த் ..
 
நோக்கம்:
 
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இன்று சிறிய கிராமத்தில் தொடங்கிப் பெருநகரங்கள் வரை பல மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பெண்கள் சுயதொழில் தொடங்க வங்கிகளிலிருந்து பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கடன்களைப் பெறும் பெண்கள் பலர் அந்தப் பணத்தைத் தங்கள் வீட்டுச் 
செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு வங்கியிலிருந்து பெறும் கடன் தொகையில் சிறிய தொழில்களைச் செய்திட வழிகாட்டி வருகிறோம்.
 
பெண்களுக்குப் பல்வேறு வகையான சுயதொழில் பயிற்சிகள் அளிப்பதுடன், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து, உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து உதவுகிறோம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளை அளித்து, அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை  சந்தைப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் பெண்களுக்குச் சுயதொழில் வழியாகப் பணமீட்டும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறோம்.


 
 
எங்கள் அமைப்பின் வழியாக தையற்கலை, அழகுக்கலை, செயற்கை நகை தயாரித்தல் (குந்தன், கிறிஸ்டல், காகிதம், களிமண்), கைவினைப்பொருட்கள் தயாரித்தல், சனல்பை தயாரித்தல், காகிதப்பை தயாரித்தல், உணவு பதப்படுத்துதல் என்று பெண்களுக்கான பல சுயதொழில்களுக்குப் பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. மதுரை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலில் செயல்பட்டு வரும் மகளிர் கூட்டமைப்பிலிருந்து எங்கள் அமைப்பிடம் சுயதொழில் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் நேரடியாகச் சென்று பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.”
 
150 ஆம் ஆண்டு விழா கொண்டாடும் BASF நிறுவனம் அறிவித்திருந்த மக்கள் நலப்பணிக்கான திட்டத்தில் பங்குபெற்று உலகம் முழுவதிலுமிருந்து வந்த 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் எங்கள் நிறுவனத்திலிருந்து கலந்து கொண்ட திட்டமான இளம் விதவைகள், இலங்கை தமிழ் வாழ் மக்கள், மற்றும் கஷ்டப்படும் பெண்களுக்கு காகிதம் மற்றும் சனல் பொருட்களை கொண்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சிகள் கொடுப்பதற்கு அனுப்பிய திட்டம் உலகளவில் இரண்டாம் இடத்திலும், ஆசியா அளவில் முதல் இடத்தையும் பெற்றது....
 
150 நபர்களுக்கு பயிற்சிகள் கொடுக்க அனுப்பிய பணத்தில் கடலூர் மாவட்டம் கூடுவெளி கிராமத்தை சேர்ந்த 60 பெண்களுக்கு இப்பயிற்சி கொடுக்கப்பட்டு சுயமாக இவர்கள் தொழில்செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றோம்... இன்னும் 60 இலங்கை தமிழ் வாழ் பெண்கள் மற்றும் 30 இளம் விதவைகளுக்கு பயிற்சி கொடுக்க உள்ளோம்... இவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் சந்தைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்..