வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 25 ஜனவரி 2017 (13:51 IST)

நடராஜனயும், தம்பிதுரையும் சசிகலா கண்டிக்க வேண்டும் - கே.பி.முனுசாமி காட்டம்

நடராஜன், தம்பிதுரை ஆகியோர் அதிமுக கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா கண்டிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக கே.பி.முனுசாமி பல கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய நடராஜன், முனுசாமிக்கு எதிராக பல கருத்துகளை கூறியிருந்தார்.  அதாவது, அதிமுக கட்சியை காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என சசிகலாவின் தம்பி திவாகரன் கூறினார். மேலும், அதிமுக எங்கள் கட்சி. நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என நடராஜனும் பேசினார். 
 
இந்நிலையில் இதுபற்றி முனுசாமி விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:
 
சசிகலாவின் நடராஜனையும், திவாகரனையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டவர் ஜெயலலிதா. அவர் இருக்கும் வரை, அவர்கள் இருவரும் போயஸ் கார்டன் பக்கமே வந்ததில்லை. ஆனால், தற்போது கட்சியே எங்களுடையது என்று பேசுகிறார்கள். அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். 
 

 
கட்சி ஒன்றும் நடராஜனின் பாட்டன் சேர்த்த சொத்து அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து அது. நான் ஒரு நக்சலைட் என நடராஜன் பேசியிருக்கிறார். இது அபாண்டமான குற்றச்சாட்டு. அதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, முதல் அமைச்சரை மீறி செயல்பட்டு வருகிறார். 


 

 
அவரும், நடராஜனும் சேர்ந்து கட்சியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். பொதுச்செயலாளர் என்கிற முறையில் சசிகலா இவர்களின் செயல்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டும்” என அவர் பரபரப்பு புகார் கூறினார்.