1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (12:09 IST)

மக்களை கவர இதுதான் வழி ; 2 திட்டங்கள் தயார்? - சசிகலா அதிரடி

அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா, தமிழகத்தின் முதல்வராகும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
ஆனால், ஒரு பக்கம் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். மறுபக்கம் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவை பெற்று வருகிறார். இது சசிகலா தரப்பிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
ஓ.பி.எஸ் தன்னுடைய பதவியை விட்டுக் கொடுத்தாலும், தான் முதல்வராக அமர்ந்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என சசிகலா தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.
 
மேலும், உளவுத்துறை அளித்த அறிக்கை சசிகலாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பலர் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும், ஜெ.வின் மரணத்தில் மக்களின் முழு கோபமும் சசிகலாவின் மேல் இருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் மிகப்பெரிய வாக்கு வங்கியான பெண்களின் மனநிலை சசிகலாவிற்கு எதிராகவே இருக்கிறது என  உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.
 
எனவே, மக்கள் மத்தியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல், முதல்வர் பதவியில் அமர என்ன செய்ய வேண்டும் என தன்னுடைய குடும்பத்தினருடன் தீவிர ஆலோசனையில் சசிகலா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தன் மீது மக்களுக்கு உள்ள கோபத்தை போக்க வேண்டுமானால், அவர்களை, முக்கியமாக பெண்களை குஷி படுத்தும் திட்டங்களை நிறைவேற்றும் முடிவுக்கு சசிகலா தரப்பு வந்துள்ளதாம். தற்போதைக்கு 2 திட்டங்கள் தயாராக இருப்பதாக தெரிகிறது. 
 
முதலில் டாஸ்மாக்கை ஓட்டு மொத்தமாக மூடுவது. இதன் மூலம் பெண்களின் ஆதரவை பெற்று விட முடியும். அடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த  ‘வீட்டுக்கு வீடு செல்போன்’ திட்டம். இதன் மூலம் இளைஞர்களின் ஆதரவை பெற முடியும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இதுகுறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், திட்டம் முடிவுக்கு வந்ததும், சசிகலா முதல்வர் பதவியில் அமர்வார் எனவும் கூறப்படுகிறது.