1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2016 (17:26 IST)

சசிகலா பெயர் இல்லை ; ஓ.பி.எஸ் பேனரை அகற்ற முயற்சி : முற்றும் பனிப்போர்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு பேனரை அகற்ற முயன்ற சம்பவம், கட்சி தலைமைக்கும், அவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவுக்கு பின் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார். அதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒருபக்கம், அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், பன்னீர் செல்வத்திற்கும், சசிகலாவிற்கும் இடையே பனிப்போர் நிகழுவதாகவும், சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன் ராவ் ஆகியோரிடம் நடத்தப்பட வருமான வரி சோதனைக்குப் பின்னால் கூட ஓ.பி.எஸ் தான் இருக்கிறார் என செய்திகள் வெளியானது.
 
மேலும், மத்திய அரசின் ஆதரவு ஓ.பி.எஸ்-ற்கு மட்டும்தான் என மத்திய அமைச்சர் வெங்கய நாயுடு வெளிப்படையாகவே பேட்டியளித்தார். இதனால் மன்னார்குடி வட்டாரம் ஓ.பி.எஸ் மேல் கோபமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில்,  மதுரை ஆண்டிப்பட்டி அருகே உள்ள உசிலம்பட்டியில் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவாக ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘ அம்மா அவர்கள் விட்டுச் சென்ற சீரிய பணிகளை தொடர்து அம்மா வழியில் செயல்படுத்த தமிழக முதல்வராக பணியேற்றிருக்கும், அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஆட்சி சிறக்க வாழ்த்துகிறோம்’ என் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அதில் ஓ.பி.எஸ் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டும் இருந்தது. சசிகலாவின் புகைப்படமோ, பெயரோ அதில் இடம் பெறவில்லை.
 
இதுபற்றி சிலர் சசிகலா தரப்பிற்கு தகவல் கொடுத்துள்ளனர். எனவே, அந்த பேனரை அங்கிருந்து அகற்றுமாறு, அந்த பகுதி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து, அந்த பேனைரை அகற்ற முயன்றனர்.
 
ஆனால், தனியார் இடத்தில் அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனரை எடுக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி போலீசார் திரும்பிச் சென்றனர்.
 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா தரப்பிற்கு நாளுக்கு நாள் வலுத்து வரும் பனிப்போர் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.