1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (16:53 IST)

எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் ஆதரவு? - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

அதிமுக எம்.எல்.ஏக்கள் தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், விரைவில் அவர்கள் தன்னிடம் வருவார்கள் எனவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.


 

 
தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:
 
எனக்கு புதிய கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. அதேபோல், சசிகலா தரப்பு கூறுவது போல் எனக்கு பின்னால் திமுக, பாஜக போன்ற எந்த கட்சியும் இல்லை. முக்கியமாக, சசிகலா தற்போது தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பொருளாலர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை...
 
என்னை கட்டாயப்படுத்திதான் சசிகலா தரப்பு  ராஜினாமா கடிதத்தை வாங்கியது. அதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்ற நிலைமைக்கு என்னை அவர்கள் கொண்டு சென்றனர். சசிகலா செய்த பல தொழில்கள் ஜெயலலிதாவிற்கு தெரியாது. சசிகலா தலைமைக்கு கீழ் மட்டத்திலிருந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 
 
ஏராளமான அதிமுக எம்.எல்.ஏக்கள் தொலைபேசி வழியாக என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்கள் விரைவில் என்னுடன் இணைவார்கள்.