வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2017 (15:39 IST)

பதவியை ராஜினாமா செய்துவிட்டு துதி பாடுங்கள்: தம்பிதுரையை சாடிய ஸ்டாலின்

சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று துணை சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை முழுக்க முழுக்க துதி பாடும் செயலாக உள்ளது என்று எதிக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தம்பிதுரையை கடுமையாக சாடியுள்ளார்.


 

 
சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்காக காரணத்தை விளக்கி செய்தியாகளுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தம்பிதுரையை கடுமையாக சாடியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தமிழக முதலமைச்சராக தேர்வு செய்தார்கள். அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது. தமிழக ஆளுநர் அவர்களும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, “ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார்” என்றும், “சசிகலா முதலமைச்சராக வேண்டும்” என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இன்னும் சொல்வதென்றால், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதல்முறையாக பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதலமைச்சர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தான், “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு நான் கொடுத்தப் பேட்டியொன்றில், “முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா என்று ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் சட்ட கடமை இருக்கிறது” என்று கூறியிருந்தேன்.
 
இப்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பித்துரை “தமிழக முதலமைச்சர் பதவியை” சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் அவர்கள் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, “சசிகலா முதல்வராக வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக “துணை சபாநாயகர்” லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.
 
ஆகவே, ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் திரு. மு. தம்பித்துரை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
ஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
 
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.