1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 1 மார்ச் 2017 (15:45 IST)

போர்க்கொடி தூக்கிய ஆதரவாளர்கள்; அடிபணிந்த தீபா - நடந்தது என்ன?

தீபா பேரவையில் நிர்வாகிகளை நியமிக்கும் விவகாரத்தில், அவரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தீபா பேரவையில் செயலாளராக நியமிக்கப்பட்டவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பேரவையை தொடங்கியதுமே, பிரச்சனையை சந்திக்கும் நிலையில் தீபா தள்ளப்பட்டுள்ளார்.
 
பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின், ஜெ.வின் பிறந்தநாளான கடந்த 24ம் தேதி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். அதேபோல், பேரவைக்கு புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். பேரவையின் செயலாளர் பதவியில் ராஜா என்பவரை நியமித்தார். ஆனால், தீபா பேரவையில், பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி ராஜா மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அவரிடம் பணம் கொடுத்த பலர் தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராஜாவை செயலாளராக ஏற்க முடியாது என அவர்கள் குரல் எழுப்பினர்.  மேலும், கலையரசி என்ற பெண் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து விட்டனர்.
 
இதனால், ராஜாவை அந்த பதவியிலிருந்து நீக்கியதோடு, தற்காலிகமாக செயலாளர் பதவியை தானே ஏற்பதாக தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், விரைவில் வேறு ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் எனவும் அவர் அறிவித்தார்.  
 
இந்நிலையில், நேற்று மாலை தீபாவின் ஆதரவாளர்கள், தி. நகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு குவிந்து, நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தங்களது கருத்துகளை கூற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களால் தீபாவை சந்திக்க முடியவில்லை. எனவே, தீபாவின் கணவர் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரை முற்றுகையிட்ட தீபாவின் ஆதரவாளர்கள், பேரவையில் சிறப்பாக பணியாற்றுவபவர்களுக்கே பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட தீபாவின் கணவர், இதுபற்றி தீபாவிடம் கண்டிப்பாக தெரிவிக்கிறேன். நீங்கள் விரும்புவது போலவே நிர்வாகிகள் நியமனம் அமையும் என கூறி சமாதானம் செய்த பின்பே, அவர்கள் கலைந்து சென்றனர்.
 
இந்த விவகாரத்தில் ஆதரவாளர்களின் எதிர்ப்பு கிளம்பியிருப்பது தீபாவிற்கு அதிருப்தியை ஏற்படித்தியிருப்பதால், இனிமேல் கவனமாக செயல்பட தீபா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.