வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (13:25 IST)

செல்போன், வீட்டு சாப்பாடு - சிறையில் சகல வசதிகளுடன் சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, அங்கு சசல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சிறையில், சசிகலாவிற்கு தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று பரபரப்பு புகார் அளித்தார். 
 
இந்நிலையில், சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து செய்திகள் வெளியே கசிந்துள்ளது. சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டவுடன், இளவரசியின் மகன் விவேக் பெங்களூரே கதி என இருந்துள்ளார். மேலும், சிறையின் அருகிலேயே ஒரு அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார். 
 
சிறையில் யாரை பிடித்தால் என்ன வேலை நடக்கும், எந்த நேரத்தில் உள்ளே செல்லலாம், எந்த நேரத்தில் போவது சிக்கல் என்பது முதல் அனைத்திற்கும் விவேக்கிற்கு தெரியும். சிறைத்துறை விதிப்படி, கைதியான சசிகலா சிறை நிர்வாகம் அளிக்கும் உணவைத்தான் சாப்பிட வேண்டும். ஆனால், சசிகலாவும், இளவரசியும் அந்த உணவை இதுவரை தொடவே இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
தொடக்கத்தில், பெங்களூரில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலில் இருந்து அவர்களுக்கு சாப்பாடு சென்றுள்ளது. ஆனால், ஹோட்டல் சாப்பாடு தனக்கு ஒத்து வரவில்லை என சசிகலா கூறியதும், சிறையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உணவு சமைத்து தினமும் அவர்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது. அதற்காக, போயஸ்கார்டனில் பல வருடங்களாக சமையல் வேலை பார்த்த சிலர் அந்த வீட்டில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்தே சசிகலாவிற்கும், இளவரசிக்கும் சாப்பாடு செல்கிறது எனக் கூறப்படுகிறது.


 

 
இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் அதிகாரிகளுக்கு விவேக் தரப்பிலிருந்து ஸ்பெஷல் கவனிப்புகள் அரங்கேறி வருவதாக தெரிகிறது. சிறைத்துறை அதிகாரிகள் பலருக்கு ஐபோன்கள் வாங்கி  கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதேபோல், யாரோடும், எப்போது வேண்டுமானாலும் சசிகலா பேசுவதற்காக அவருக்கு ஒரு சிறிய செல்போன் ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறதாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், யாரேனும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் இந்த நடவடிக்கையாம். 
 
கர்நாடக பாஜகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ சமீபத்தில் சிறைக்கு சென்ற போது, சசிகலாவிற்கு அதிகாரிகள் சாப்பாடு வாங்கி செல்வதை கவனித்துள்ளார். அவர்தான் இந்த விவகாரங்கள் பற்றி வெளியே கிளப்பிவிட்டார் என்று கூறப்படுகிறாது. இந்த தகவலை அறிந்த டிஐஜி ரூபா, அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளார். அதன் பின்தான், இதுகுறித்து பரபரப்பு புகார்களை அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
சிறையில் பணத்தின் மூலம் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு சில சலுகைகளை சிலர் அனுபவிப்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான். அதிலும், பண பலம் மிக்க, சசிகலா குடும்பத்தினர், சசிகலாவை நன்றாக கவனிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...