வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2017 (12:03 IST)

சிபிஐ கண்காணிப்பில் எம்.ஆர். விஜய பாஸ்கர் - அடுத்த ரெய்டு எப்போது?

தமிழக அமைச்சர்கள் மீது தனது கழுகுப் பார்வையை திருப்பியிருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, பல அமைச்சர்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சிக்குவார் எனத் தெரிகிறது.
 
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கரின் செயலால் தான் தேர்தலை நிறுத்தப்பட்டது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்தது யார்? மேலும் அவரை காட்டிக்கொடுத்தது யார்? என்று அ.தி.மு.க தலைமையிடம் மாறி, மாறி யோசிக்க, அதே வேலையில் கடந்த ஆண்டு 100 தனியார் பஸ்களை வழித்தட அனுமதியுடன் 10 மடங்கு கொடுத்த சர்ச்சையில் அப்போதைய மற்றும் இப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் பெரிதளவில் அடிபடுவதால் அவரை சி.பி.ஐ மற்றும் ஐ.டி அதிகாரிகள் தனிப்பார்வையில் கண்காணித்து வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொங்கு மண்டலத்தில், 100 தனியார் பஸ்களை, வழித்தட அனுமதியுடன், 10 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கிய, வி.ஐ.பி.,க்கள் குறித்தும், பஸ்களை விற்றவர்கள் பட்டியலை தயார் செய்தும், சி.பி.ஐ., கண்காணிப்பை தீவிரப்படுத்தி பின்பு அப்படியே விட்டு விட்டது. ஆனால் தற்போது அந்த விவகாரமும், அந்த துறையை சார்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் விவகாரமும் பூதாகரமாகி உள்ளது.
 
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு, நவ., 8 முதல் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்தது. இதனால், கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வைத்திருந்த, வி.ஐ.பி.,க்கள் பலர், அதை மாற்றும் வகையில், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தனர். அந்த வகையில், மாம்பழத்துக்கும், முட்டைக்கும் பெயர் பெற்ற ஊர்களைச் சேர்ந்த இரு, வி.ஐ.பி.,க்கள், தங்களின் கறுப்புப் பணத்தை, தனியார் பஸ்கள், அவற்றின் வழித்தடங்கள் மீதும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 100 தனியார் பஸ்கள், வழித்தட அனுமதியுடன் வாங்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அப்போது, பஸ் வழித்தட அனுமதிக்கு, அரசு, 20 லட்சம் ரூபாய் நிர்ணயித்து இருந்தது. 
 
 
இந்நிலையில், இயக்கப்படும் பஸ்சின் நிலையை பொறுத்து, ஒரு பஸ், வழித்தடத்துடன், 1.50 கோடி ரூபாய் முதல், 2.50 கோடி ரூபாய் வரை, மார்க்கெட் விலையாக உள்ளது. ஆனால், பணப்புழக்க கெடுபிடி காரணமாக, ஒரு வழித்தடம் மற்றும் பஸ்சை, 10 கோடி ரூபாய் கொடுத்து, இரண்டு, வி.ஐ.பி.,க்கள் வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அந்த வகையில், 100 பஸ்கள், வழித்தடத்துடன், 1,000 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து, மத்திய உளவுத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட, 23 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், நவ., 8க்கு பின், கை மாறிய தனியார் பஸ்கள் குறித்த பட்டியலை தயார் செய்து மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளனர்.
 
இந்நிலையில் இதன் மதிப்பு ரூ. ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் இதுவும் ஒரு விதமாக கருப்பு பண பதுக்கல் என்றும் கூறப்படும் நிலையில் அப்போது இதில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, சங்ககிரி, கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 88 தனியார் பஸ்கள் கை மாறி உள்ளன. சேலம் மாநகரில், எட்டு தனியார் பஸ்களை, ஒரே நிறுவனம் வாங்கி உள்ளது. கொங்கு மண்டலத்தில், 88 பஸ்கள், முறையாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பஸ்கள் மட்டும் உரிமையாளர்களின் பெயர் மாறாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
இந்த பஸ்களை வாங்கிய வர்கள், விற்பனை செய்தவர்கள் குறித்து பட்டியல் தயாரித்துள்ள, சி.பி.ஐ., பணத்தை எந்த வகையில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து, தீவிர விசாரணையை துவக்கி  அந்த பட்டியலையும் அனுப்பியது. சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி, வி.ஐ.பி.,க்கள் இருவரையும், தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இது, தனியார் பஸ் உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மத்தியில், பீதியை அப்போது ஏற்படுத்தி இருந்தது.  கொங்கு மண்டலத்தில், ஆளுங்கட்சி, வி.ஐ.பி.,க்கள் இருவர், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து, 100 தனியார் பஸ் வழித்தடங்கள், 10 சேகோ பேக்டரிகளை வாங்கி குவித்து உள்ளனர். 
 
இவர்களின் கறுப்புப் பண பதுக்கல் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். இந்நிலையில் ஏற்கனவே ஒ.பி.எஸ் அணிக்கு தனது ஆதரவாளர்களை அனுப்பி வைத்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இவர் மட்டும், இப்போது வருகின்றேன், அப்போது வருகின்றேன் என்று கூறிய படி இருக்க.. குறுக்கே தம்பித்துரை தடுப்பதாகவும் அ.தி.மு.க வட்டாரங்களே தெரிவிக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ் மத்திய அரசிற்கு இந்த போக்குவரத்து துறையையும் சேர்த்து அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. 
 
 
இந்நிலையில் ஏற்கனவே கரூர் கிளை எண் 1 மற்றும் கிளை எண் 2 ஆகிய கிளைகள் மட்டுமில்லாமல், போக்குவரத்து துறைக்குட்பட்ட பல கிளைகளில் அப்போதைய செல்லாத நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 மாற்றியதை போக்குவரத்து ஊழியர்களும் ரகசியத்தை சொல்ல, தற்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எந்நேரத்திலும் சி.பி.ஐ வலையில் சிக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் ஆர்.கே.நகர் தேர்தலின் போது இவரது வேலைப்பாடுகள் குறித்தும் டி.டி.வி தினகரனிடம் உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட் அ.தி.மு.க கட்சியையே கதிகலங்க வைத்துள்ளதாம்,  இதனால், எந்நேரத்திலும், கரூர்,  சேலம், நாமக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்களை குறி வைத்து, 'ரெய்டு' நடக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த ”ரெய்டு” பின்னணியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகின்றது. 
 
எது எப்படியோ, ஒரு மாநிலத்தில் ஒரே பெயருடைய இருவர் இரு துறைகளில் அமைச்சர்களாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தனரா? அல்லது இந்த விஜயபாஸ்கர் மற்றும் அந்த விஜயபாஸ்கர் என்று போக, போக தான் பெரும் குழப்பம் நீடிக்கும் என்பதிலும் ஐயமில்லை
 
- சி.ஆனந்தகுமார்