1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2016 (15:27 IST)

அதிமுகவை பலவீனப்படுத்த பாஜகவின் வியூகங்கள்! - பாகம் 1

தமிழர் தந்தை பெரியாரின் அடித்தளம் வலுவாக அமைந்த பூமி, திராவிட தலைமைகள் ஊழலால் புரையோடி இருந்தாலும், அதன் ஆணி வேர்கள் வலுவாக உள்ள தமிழகத்தில் நாகர்கோவிலை தாண்டி பிஜேபியின் வாக்கு வங்கி என்னவோ பூஜியம் தான்.


 

ஆயிரம் மோடி மஸ்தான்களை, லட்சம் முறை பேச வைத்தாலும், அவர்களுக்கு கிடைக்க போவது என்னவோ முட்டை மேல் முட்டை தான். முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மரணத்திற்க்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் தொடர் அதிர்வலைகள் பிஜேபியின் இரு வியூகங்களை வெளிப் படுத்துகிறது.

வியூகம் I - அதிமுக தலைமையை பலவீனப்படுத்துவது:

டெல்லியில் 3 வது மிகப்பெரும் கட்சியாக பவனி வந்தது; பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லாம் அதிமுக தலைமையின்  கடைக்கண் பார்வைக்கு போயஸ் கார்டனில் தவம் இருந்தது எல்லாம் அந்த காலம். முன்னாள் முதலமைச்சர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவர் எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் (மத்திய தலைமை நிர்பந்தத்துடன்) ஒப்புதல் பெற்றது இந்த காலம்.

சசிகலா புஸ்பாவின் கால்தடம் குடியரசு தலைவர் மாளிகை வரை சென்று இருப்பது, வெங்கய்யா நாயுடு திரும்பத் திரும்ப அதிமுக எங்களின் நட்பு கட்சி என்று சொல்லுவது எல்லாம், சசிகலாவை நோக்கி மட்டும் அல்லவே!

யார் பொது செயலாளர்? யார் முதலமைச்சர் ஆக வேண்டும்? என்பது எல்லாம் அதிமுக உள் விவகாரம். ஆனால் ஓ.பி.எஸ். அவர்களுக்கு மட்டும் தான் எங்களின் ஆதரவு என்று பிஜேபியின் ஹெச்.ராஜா மற்றும் வெங்கய்யா நாயுடு பேசுவது, எல்லாம் விடை காண முடியாத புதிரா என்ன?

இந்நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பிஜேபியின் சேகர் பேசும்போது, ’அதிமுக அமைச்சர்கள் மீதும் IT Raid தொடரும்’ என்கிறார்.

சசிகலா புஸ்பா, தீபா போன்றவர்கள் மூலம் அதிமுக தலைமையை பிளந்து பலவீனப்படுத்தி, தாங்கள் நினைத்ததை சாதிக்க சில வியூக விற்பனர்கள், வியூகங்களை செய்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

வியூகம் II - ஊழலை மிகப்பெரிதாக காட்டுவது:

கரூர் அன்புநாதன், கண்டெய்னர் லாரி பண குவியல்கள், நத்தம் விஸ்வநாதன், சேகர் ரெட்டி அன் கோ என கொஞ்சம் கொஞ்சமாக தலைமை செயலாளரிலிருந்து தலைமை செயலகம் வரை மத்திய அரசின் தாக்கம் உள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து மற்றும் போயஸ் கார்டன் அன் கோ வரை கூட விரிவடையும்.

அதற்காக அதிமுக தலைமை கரைபடாத கரங்களுக்கு சொந்தமானது என அர்த்தம் இல்லை. கண்டைனர் லாரி பண குவியல்கள் பிடிப்பட்ட போது அதிமுக தலைமைக்கு ஆதரவாக பேசிய அதே பிஜேபிதான் யூ டர்ன் அடித்து இருக்கிறது.

ரெட்டிகள் பண பறிமாற்றம், பொதுப் பணித்துறையில் அவர்களின் ஆதிக்கம், மத்திய அரசுக்கு நேற்று கிடைத்த தகவலா என்ன?  ஜெயலலிதா என்கிற இரும்பு பெண்மணி இருந்தபோதே மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ஊழல்கள் பற்றிய தகவல் நிச்சயம் கிடைத்துத் தான் இருக்கும்.

ஏன் எனில் தமிழ் வாராந்திர புலனாய்வு இதழ்களை (நன்றி : ஜூனியர் விகடன்) விட மத்திய புலனாய்வு துறை, வருமான வரி துறை அதிகாரிகள் திறமையானவர்கள் என நம்புவோம். அப்படி இருந்தும் என் எந்த கால தாமதம்?

அப்போதே இந்த மத்திய அரசுக்கு திராணி இருந்தால் துணை ராணுவத்துடன் தலைமைச் செயலகம் நுழைந்து இருக்கலாமே? அப்போது அவர்கள் அதை செய்யவில்லை. காரணம் அவர்களுக்கு நன்றாக தெரியும் ஜெயமான ஜெ விளைவுகளை பற்றி.

கட்டுரையாளர்:

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்.