வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (15:09 IST)

சசிகலாவால் வெளியேறும் தொண்டர்கள் - பின்னணி என்ன?

அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு சசிகலாவை முன்னிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுகவைச் சேர்ந்த பலர் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா கட்சியின் தலைமை ஏற்று, வழிநடத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் குரல் கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் கடந்த மாதம் 31ம் தேதி அதிமுகவின் பொருளாலராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார். 
 
மேலும், அவரே தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கையை தம்பிதுரை உள்ளிட்ட சிலர் முன்னிறுத்தி வருகின்றனர். இதையடுத்து சசிகலா அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ், விரைவில் அவரின் பதவியை சசிகலாவிற்கு விட்டுத் தருவார் என அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது பிடிக்காத அதிமுகவினர் பலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் தீபாவை நேரில் சந்தித்து அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.  மேலும், தீபா பேரவை ஆரம்பிக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
ஒருபக்கம், சசிகலாவின் தலைமையை பிடிக்காத பலர் அதிமுக கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நடிகர் ஆனந்தராஜ். சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் பிரச்சார பேச்சாளரும், துணை கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்த நாஞ்சில் சம்பத் தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.
 
அதேபோல், அதிமுகவின் முதல் நிலை பேச்சாளர் ஜெயவேல் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முதல்வர் என்கிற நிலையை மறந்து சசிகலாவின் காலில் விழுந்த ஓ.பன்னீர் செல்வத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
 
மேலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை. இதனால், அதிமுகவிலிருந்து விலகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகும் அவர்கள் பாஜக, திமுக போன்ற கட்சிகளில் தங்களை இணைத்துக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.