வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2016 (13:15 IST)

பிடியை இறுக்கும் மோடி ; கலக்கத்தில் கார்டன் - பின்னணி என்ன?

போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை மன்னார்குடி வட்டாரத்தை பீதிக்கு உள்ளாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட சோதனை மூலம், அவருக்கும் ராம் மோகன் ராவுக்கு இடையே நெருங்கிய நட்பும், தொழில் ரீதியான உறவும் இருந்ததை உறுதி செய்த வருமான வரித்துறையினர், சமீபத்தில் ராம் மோகன் ராவின் சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள வீடு, அவரின் மகனின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறை என அனைத்து இடங்களையும் அதிரடி சோதனை நடத்தினர்.
 
அதில் 5 கோடி மதிப்புள்ள தங்கம், பல கோடி ரூபாய் பணமும் சிக்கியது. முக்கியமாக அதில், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை ஆகியவை கைப்பற்றப்பட்டது. 


 

 
தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. அதில் அவர் பல கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமானவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெ.வின் மறைவிக்கு பின், இவரைத்தான் முதல் அமைச்சராக்க விரும்பினார் சசிகலா.  ஆனால், மத்திய அரசின் விருப்பமாக ஓ.பன்னீர் செல்வம் இருந்ததால், அவரால் அதை தடுக்க முடியவில்லை. 
 
இப்படி கார்டனுக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவது, மன்னார்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏனெனில், இவர்களிடம் எல்லாம் நடத்தும் சோதனையின் முடிவில், வருமான வரித்துறையினர் போயஸ் கார்டனுக்குள்ளும் வருவார்கள் என்பதை அவர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.
 
அநேகமாக, ராம் மோகன் ராவ் கைது செய்யப்பட்டால் அடுத்த இலக்கு போயஸ் கார்டனாக இருக்கலாம் என அதிமுக அமைச்சர்கள் வட்டாரத்தில் இப்பேதே பேச தொடங்கியுள்ளனர். எனவே இதை எப்படி சமாளிப்பது என்ற நெருக்கடியில் தற்போது என சசிகலா தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதற்கு பின்னால் பிரதமர் மோடி இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்தே வைத்துள்ளனர். எனவே, டெல்லி வட்டாரத்தில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   
 
வருமான வரித்துறையினரின் அடுத்த அட்டாக் என்னவாக இருக்கும் என்பதை கார்டன் தரப்பும் அதிமுக அமைச்சர்களும் அதிர்ச்சியுடன் எதிர் நோக்கியிருப்பதாக பேசப்படுகிறது.