வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2015 (13:18 IST)

2015 -இன் டாப் 10 கமர்ஷியல் படங்கள்

சுனாமி, மழை வெள்ளத்தை பற்றியெல்லாம் பக்கம் பக்கமாகப் பேசுகிறோம். 


 
அவ்வளவு சேதம், இவ்வளவு மரணங்கள் என்று. தமிழ் திரைத்துறையில் வருட வருடம் சுனாமி அடிக்கிறது, வாஷ் அவுட் ஆகின்றன படங்கள். அதுபற்றியெல்லாம் திரைத்துறையே கவலைப்பட்டதாக தெரியவில்லை. 
 


இந்த வருடமும் பன்றி குட்டி போட்டது போல் வதவதவென்று படங்களை உற்பத்தி செய்து தள்ளியது தமிழ் சினிமா. நெட் ரிசல்ட...? கிட்டத்தட்ட 200 படங்களில் பத்து தேறினால் அதிகம்.
 
ஐ படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் மஞ்ச கடுதாசி தரும் அளவுக்குதான் இருந்தது நிலைமை. ஆனாலும், இந்த வருடம் தமிழில் அதிகம் வசூலித்த ஐ படத்தை ஒரேயடியாக உதறிவிட முடியாது, அதுவும் நமது டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாகுபலியை என்னத்தான் இரு மொழிப்படம் என்றாலும் அது தமிழில் டப் செய்யப்பட்ட தெலுங்குப் படம்தான். அதன் தமிழக வசூல் மட்டுமே அதனால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

தயாரித்தவர்கள், விநியோகித்தவர்கள், திரையிட்டவர்கள் என மூன்று தரப்பினருக்கும் லாபம் பெற்றுத் தந்த அடிப்படையில் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளோம்.
 
10. டிமான்டி காலனி
 
கச்சிதமான திரைக்கதை இருந்தால் ஒரு அறைக்குள்ளேயே படம் எடுக்கலாம் என்று நிரூபித்த படம். பேய் படங்களை சிரிக்க சிரிக்க எடுத்து லாபம் பார்க்கும் தமிழ் சினிமாவில் பயமுறுத்தி பாக்ஸ் ஆபிஸில் வென்ற பெருமைக்காகவே டிமான்டி காலனியை கொண்டாடலாம்.
 
9. கொம்பன்
 
கார்த்தியின் வாழ்வா சாவா போராட்டத்தை சுபத்துடன் நிறைவு செய்தது கொம்பன். குட்டிப்புலி முத்தையா இதிலும் சாதி முகம் காட்டியிருந்தாலும், கொம்பனின் முரட்டு இதயத்துக்குள்ளிருந்த காதலும், கருணையும் படத்தை காப்பாற்றியது. கொம்பனின் மேக்கிங்கிற்கும் தனி இடம் உண்டு. படத்தை தடை செய்ய வேண்டும் என்ற எதிர்ப்புக் குரலே பல இடங்களில் படத்துக்கான பப்ளிசிட்டியாக மாறியது. 
 
8. வேதாளம்
 
அடாது மழையிலும் ரசிகர்கள் வேதாளத்தை வெற்றி பெறச் செய்தார்கள். சிவாவின் சென்டிமெண்ட் நகாசு வேலைகளால் படம் தப்பித்தது. மற்றபடி படத்தில் வரும் வில்லன்கள் பொறுமையை சோதித்தார்கள். அஜித் நடித்தால் அட்டு படத்தையும் பார்ப்போம் என்ற ரசிகர்கள் இருக்கும்வரை வேதாளங்களுக்கு வசூல் குவியத்தான் செய்யும்.
 
7. நானும் ரௌடிதான்
 
நயன்தாராவை கவர்ச்சியாக மட்டுமே பார்த்தவர்களுக்கு, காது கேட்காத கதாபாத்திரத்தில் கலக்கியெடுத்த நயன்தாரா புது அனுபவம். சின்னதாக ஒரு கதை, அதில் சுவாரஸியமான கதாபாத்திரங்கள், யதார்த்தம் கெடாத காட்சியமைப்பு என்று எளிமையாக வென்றார் விக்னேஷ் சிவன். தங்கமே உன்னைத்தான் பாடல் இளைஞர்களின் ஹார்ட் பீட்டானது வெறும் டியூனால் மட்டுமில்லை, நயன்தாராவாலும்தான்.
 
6. பாபநாசம்
 
சிலர் சொல்வதைப் போல் பாபநாசம் ஆஹா ஓஹோ ஹிட்டெல்லாம் இல்லை. அதேநேரம் போட்ட காசைவிட அதிகமாக, திருப்திகரமாக படம் வசூலித்தது. மூன்று சென்டர்களையும் கவர் செய்த கமல் படம் சமீபத்தில் இதுவாகத்தான் இருக்கும். மலையாள ஜார்ஜ் குட்டி அளவுக்கு இல்லையென்றாலும் சுயம்புலிங்கம் தனது சுய திறமையில் படத்தை காப்பாற்றினார். 
 
5. பாகுபலி
 
தமிழகத்தில் பாகுபலியின் வசூலை கணக்கிலெடுத்ததால் இந்த இடம். இதுவே நேரடித் தமிழ்ப் படமாக இருந்திருந்தால் பாகுபலி ஒன்றாவது இடத்தில் இருக்க வேண்டியது. இந்த வருடத்தில் ரசிகர்களை என்டர்டெய்ன் செய்ததில் ராஜமௌலியின் பாகுபலிக்கே முதலிடம்.


 
 
4. ஐ
 
சென்னையில் 10 கோடிகளைத் தொட்ட ஒரே தமிழ்ப் படம் இந்த வருடம் ஐ மட்டுமே. தமிழகத்திலும் செம வசூல். முதலிடத்தில் இருக்க வேண்டிய படம், அதன் பிரமாண்ட பட்ஜெட்டுக்காகவும், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கடன்கள் காரணமாகவும் பின்தங்கியிருக்கிறது. எத்தனை கோடியில் படமெடுத்தாலும் ஷங்கர் அதரப்பழைய கருவைத்தான் கோடிகள் செலவளித்து பாலீஷாக்குவார் என்பது ஐ -இன் மிகப்பெரிய பின்னடைவு.
 
3. காஞ்சனா 2
 
தரம் அடிப்படையில் பார்த்தால் இந்தப் பட்டியலில் இடம்பெறவே இதற்கு தகுதியில்லை. ஆனால், வசூல்...? ஒற்றை டிஜிட்டில் தயாரான இந்தப் படம் மூன்று டிஜிட்டுகளில் சம்பாதித்தது. எபிசி என்று சென்டர் பாகுபாடில்லாமல் நின்று ஆடியது காஞ்சனா பேய். தெலுங்கில் டப் செய்து அங்கேயும் கரன்சிகளை அள்ளிக் கூட்டியது.
 
2. தனி ஒருவன்
 
இதுதாண்ட கமர்ஷியல் படம் என்றும் கமர்ஷியல் ஹிட் என்றும் சொல்ல வைத்தது தனி ஒருவன். இரண்டு முரணான கதாபாத்திரங்களை படத்தில் கட்டியெழுப்பியிருந்த நேர்த்தியே இந்தப் படத்தின் அழகான அம்சம். அரவிந்த்சாமிக்கு இணையாக ஜெயம் ரவியும் ஜெயித்திருந்தார் நடிப்பில். அவரை முன்னணி நாயகனாக்கிய வகையில் தனி ஒருவன் ஒரு நாயகனை உருவாக்கியது.
 
1 .காக்கா முட்டை
 
ஏன் இந்தப் படத்துக்கு முதலிடம்? காரணம் சிம்பிள். காக்கா முட்டையின் பட்ஜெட் வெறும் எண்பது லட்சங்கள். படம் வசூலித்தது 12 கோடிகள். பதினைந்து மடங்கு அதிக வசூல். படத்தின் தரம் சொல்லவே வேண்டியதில்லை. தரம், வெற்றி இரண்டிலும் சென்டம் அடித்த ஒரு படம் டாப் டென்னில் முதலிடம் பிடிப்பது தமிழ் சினிமாவுக்கும், நம் ரசனைக்கும் கிடைத்த பாராட்டு என்றே சொல்லலாம்.