1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (09:31 IST)

தமிழகம் - 2015: முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மரணம்

நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.


 

 
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்) மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
 
அங்கு அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. 
 
அப்துல் கலாமின் மறைவு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என தேசமே கண்ணீர் வடித்தது.
 
இதைத் தொடர்ந்து, அப்துல் கலாமின் உடல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசின் ழுமு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ஜூலை 30 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
தமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா. ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அப்துல்கலாம் மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954 ஆம் ஆண்டு இயற்பியலில் பட்டம் பெற்றார்.
 
1955 ஆம் ஆண்டில் சென்னை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று ஆசைபட்டார். ஆனால் விமானியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், சென்னை எம்ஐடி யில் உயர் கல்வியை முடித்த அவர் 1960 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அங்கு, இந்திய ராணுவத்திற்கான ஹெலிகாப்டரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட அவர், பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனது ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டார்.
 
1980 ஆம் ஆண்டு எஸ்எல்வி -3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியதில் அப்துல் கலாம் முக்கிய பங்காற்றினார். இதைத் தொடர்ந்து, 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினரா்.
 
இந்நிலையில், 1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை  நடத்தியதில் அப்துல் கலாமின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அத்துடன் அக்னி, பிருத்வி, ஆகாஷ் உள்ளிட்ட 5 ஏவுகணை திட்டங்களில் அவர் சிறப்பாகப் பணியாற்றினார்.
 
அப்துல் கலாமின் சேவையைப் பாராட்டி 1981 ஆம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு 'பத்ம விபூஷண்' விருது வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 
30 க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அப்துல் கலாமிற்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தன. அத்துடன் ஹூவர் மெடல், சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
 
சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், இந்தியா 2020 உள்ளிட்டட பல நூல்களை எழுதியுள்ள அப்துல் கலாம் திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டு நலனின் மீது மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
 
இந்நிலையில், 2002 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நாட்டின் 11 ஆவது குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் பதவியேற்றார். 2007 ஜூலை 25 ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவி வகித்தார். அப்போது எளிமையான குடியரசுத்தலைவர் என்று நாட்டு மக்களால் பாராட்டப்பட்டார். இதனால், மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் போற்றப்பட்டார். 
 
குடியரசுத் தலைவர் பதவி காலத்திற்குப் பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அப்துல் கலாம், இளைய தலைமுறையினருக்காக பயனுள்ள பல ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
 
'கனவு காணுங்கள்' என்று கூறி நாட்டின் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தி வந்த அப்துல் கலாமின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகின்றது.