செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2015 (13:23 IST)

2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

மக்கள் நல்ல படங்களை ஓட வைப்பார்கள் என்பது கற்பனையான நம்பிக்கை. நல்லதோ கெட்டதோ, தங்களுக்குப் பிடித்தமானதை மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள், ஓட வைக்கிறார்கள்.  


 
அந்தவகையில் பல நல்ல படங்கள் இந்த வருடம் கண்டுகொள்ளப்படாமல போயின. அவற்றை யார்தான் பாராட்டி அந்தப் படங்களை உருவாக்கிய கலைஞர்களை ஊக்குவிப்பது?
 
 
இந்த வருடம் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த பத்து படங்களைப் பார்ப்போம்.
 
10. தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
 
தமிழுக்கு புதிதான அறிவியல் தொழில்நுட்ப களத்தில் இந்தப் படத்தின் ஒருபகுதி கதை பயணித்தது. அறிவுஜீவித்தனமான களம் ரசிகர்களுக்குப் பிடிக்காது என்ற ஆகம விதியை உரசிப் பார்த்ததே இதன் முக்கியத்துவம். கமர்ஷியல் ஃபார்முலாவைத் தாண்டி கவனிக்க வைத்தது இந்த வித்தியாசமான கதைக்களம் என்பதில் சந்தேகமில்லை.
 
9. கத்துக்குட்டி
 
கலாபூர்வமாகச் சொல்ல இந்தப் படத்தில் அதிகமில்லை. மீத்தேன் வாயு எடுப்பது போன்ற அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சனையை நகைச்சுவையுடன் சொன்ன பாங்குக்காக கத்துக்குட்டி கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் அரதபழசான பிரேமுக்குள்ளேயே சமூகப் பிரச்சனைகளை கோடிட்டு காட்டியதற்காக கத்துக்குட்டிக்கும் தரலாம் ஒரு ஸ்டார்.
 
8. ராஜதந்திரம்
 
க்ரைம் த்ரில்லர் கதைகள் தமிழில் அதிகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் காதல், காமெடி, சென்டிமெண்ட் என்று அவியலாக்கி பார்ப்பவர்களை அவதிக்குள்ளாக்குவார்கள். ராஜதந்திரம் அதிலிருந்து மாறுபட்டு க்ரைம் த்ரில்லர் ஜானருக்கான நியாயத்தை செய்தது. வரவேற்கத்தக்க முயற்சி.
 
7. 36 வயதினிலே
 
பெண்களை மையப்படுத்திய படங்கள் தமிழில் குறைவு. அப்படியே வெளிவந்தாலும் லாபம் ஈட்டாது என்பதை 36 வயதினிலேயே நொறுக்கியது. சாதனை புரிவதுதான் பெண்ணின் அடையாளம் என்றது கமர்ஷியல் வேல்யூவுக்கு சரி, மற்றபடி ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் செய்யும் வேலைகளிலேயே கௌரவத்தை பேணுவதே உண்மையான பெண் விடுதலை. எத்தனை பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து சாப்பிடுகிற வாய்ப்பு கிடைக்கும்? அது கிடைக்காதவர்கள் எல்லாம் கௌரவமாக வாழ முடியாதவர்களா இல்லை அதற்கு தகுதியில்லாதவர்களா? இந்த நெருடலைத் தாண்டியும் 36 வயதினிலே முக்கியமானதே.


 
 
6. எனக்குள் ஒருவன்
 
கன்னட திரையுலகில் கத்தி செருகிற லூசியா படத்தின் தமிழ் ரீமேக். இந்த வருடத்தின் மகத்தான தோல்விப் படங்களில் ஒன்றாக இருந்தாலும் இதன் நான் லீனியர் திரைக்கதையும், கதைக்குள் கதை ஊடுபாவும் திரைக்கதையும் புதியதொரு காட்சி அனுபவத்தை தந்தன. வித்தியாசமான திரைக்கதைக்கு முயற்சிக்கும் இயக்குனர்களுக்கு இந்தப் படம் ஒரு முன்மாதிரி.
 
5. இன்று நேற்று நாளை
 
தமிழின் முதல் டைம் மெஷின் திரைப்படம். சயின்ஸ் ஃபிக்ஷன் தமிழுக்கு வெகு அந்நியம். அதிலும் டைம் ட்ராவல் என்ற கருவை எடுத்து அதனை வெற்றிகராமாகச் சொன்ன படம். தமிழின் வருங்கால சயின்ஸ் ஃபிக்ஷன் முயற்சிகளுக்கு தன்னம்பிக்கையளித்தது என்ற வகையில் இப்படம் முக்கியமாகிறது.
 
4. கிருமி
 
போலீஸ் இன்பார்மர் என்ற அதிகம் அறியப்படாத பிரதேசத்தை கிருமி காட்சிப்படுத்தியது. சென்னையில் இருந்து கொண்டே மனைவியை பார்க்க வராத கணவன், கணவனின் தான்தோன்றித்தனத்தை கேள்வி கேட்காமல் அனுசரிக்கும் மனைவி, வருடங்களாக இன்பார்மராக இருந்தும் போலீஸிடம் பம்மும் சார்லியின் கதாபாத்திரம், சூதாட்டம் நடக்கும் பார் என நம்பகத்தன்மை கிருமியில் மிகவும் குறைவு. என்றாலும் ஹீரோயிசம் இல்லாத திரைக்கதைக்காகவும், யதார்த்தமான காட்சிப்படுத்துதலுக்காகவும் கிருமி கவனிக்க வைக்கிறது.
 
3. பாபநாசம்
 
க்ரைம் த்ரில்லர்களில் இது புது மாதிரி. குடும்பத்துடன் பார்க்கிற மாதிரியான இதன் கதையும், திரைக்கதையும் வெகு அபூர்வம். நெல்லை வட்டார வழக்கில் கமல் சுயம்புலிங்கமாக வாழ்ந்தார். அடுத்து என்ன என்ற கேள்வியுடன் நகர்ந்த திரைக்கதை ரசிகர்களை சீட் நுனியில் கட்டிப்போட்டது. தமிழின் கௌரவமான முயற்சிகளில் இதனையும் சேர்க்கலாம்.
 
2. குற்றம் கடிதல்
 
ஆசிரியர் அடித்ததால் பாதிக்கப்படும் மாணவன் என்ற சின்ன விடயத்தை எடுத்து திரைக்கதை பண்ணப்பட்ட படம் குற்றம் கடிதல். மத்தியதர வர்க்க மனிதர்களை அச்சு அசலாக படம் காண்பித்தது. அருமையான இந்த முயற்சி இன்னும் அதிகம் பேரை சென்றடைந்திருக்க வேண்டும். பிரபலங்களை வைத்து படத்தை விளம்பரப்படுத்தியிருந்தால் இன்னும் அதிகம் பேரை சென்றடைந்திருக்குமோ என்ற ஆதங்கம் படம் பார்த்த அனைவருக்குமே உள்ளது. சமூக உணர்வுள்ள இளைஞனின் கதாபாத்திரம் மட்டுமே இதில் நெருடல். தரத்துக்கேற்ற கவனிப்பு கொஞ்சமும் கிடைக்காத படமிது.
 
1. காக்கா முட்டை
 
சேரி மனிதர்களின் ஒரு துளி, காக்கா முட்டை. ஆம், ஒருதுளிதான். அதையும், பீட்சா ஆசையில் அலையும் இரு சிறுவர்கள் என்ற கருணையின் பாதையில் சஞ்சரித்ததால்தான் இவ்வளவு அதிக பார்வையாளர்களை படம் சென்றடைந்தது. ஹீரோயிசம், காதல் போன்ற எந்த குணமும் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியும், லாபம் தர முடியும் என்று நிரூபித்ததற்காக காக்கா முட்டை முதலிடத்தை பிடிக்கிறது.