செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:50 IST)

மும்பை தாதா தாவுத் இப்ராகிமின் வலது கை சோட்டராஜன் கைது

1995 ஆம் ஆண்டு மும்பை தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாகி, பல வருடங்களாக மும்பை போலிசாரால் தேடப்பட்டு வந்த மும்பை தாதா சோட்டாராஜன் 2015 அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டார்.


 

 
மும்பையின் நிழல் உலக தாதாவாக இருந்த தாவுத் இப்ராகிமின் வலது கரமாக செயல்பட்டவர் சோட்டாராஜன். ஒரு கட்டத்தில், தாவுத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து பிரிந்து தனியாக செயல்பட ஆரம்பித்தார். இதனால் தாவுத்திற்கும் சோட்டாராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சோட்டாராஜனை தாவுத் கொலை செய்ய திட்டமிட்டார்.
 
2000 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பாங்காக் மார்க்கெட்டில் தாவுத்தின் ஆட்கள் ராஜன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராஜனின் உடலில் பல இடங்களில்  குண்டு பாய்ந்தது. தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தார் சோட்டா ராஜன். அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.  


 

 
அந்நிலையில், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, சோட்டாராஜன்  இந்தோனேஷியாவில் உள்ள ஒரு உல்லாசவிடுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.  அதன்பின் மும்பை போலிசார் இந்தோனேஷியா சென்று அவரை இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சி மேற்கொண்டனர்.
 
ஆனால் இந்தியாவிற்கு வந்தால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால்  சோட்டாராஜன் தன்னை ஜிம்பாப்வே அழைத்து செல்லுமாறு கெஞ்சியதாகவும், தனது மனைவி மற்றும் தந்தையைப் போல தன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்று அஞ்சியதாகவும் சிபிஐ அதிகாரி மேஜர் ரெயின்ஹார்டு கூறினார்.
 
எனினும், சிபிஐ அதிகாரிகள் அவரை நவம்பர் 6 ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம், டெல்லிக்கு அழைத்து வந்தனர். டெல்லிக் கொண்டு வரப்பட்ட சோட்டாராஜனை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


 

 
சோட்டா ராஜன் மீது மும்பை காவல்துறையினர் பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சோட்டா ராஜன் மீது தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 70 வழக்குகள் மும்பை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
அவரை டெல்லி சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அதன்பின், சோட்டா ராஜனின் சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் இப்போது திகார் சிறையில் இருக்கிறார் சோட்டாராஜன்.